சிவகங்கையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் கலந்துரையாடல்
சிவகங்கை; சிவகங்கையில் வெளிநாடு வாழ் இந்தியர், விவசாயிகள், தென்னை நார் உற்பத்தியாளர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், கோகுல இந்திரா முன்னிலை வகித்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் அரபு நாடுகள், மலேசிய, சிங்கப்பூரில் அதிக அளவில் கட்டட பணி செய்து வருகின்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி இறக்க நேர்ந்தால் அவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர சென்னை போன்ற விமான நிலையங்களில் மிகவும் சிரமமாக உள்ளது. இவற்றை மத்திய அரசிடம் பேசி எளிமைப்படுத்த வேண்டும். கிடைமாடு மேய்ப்பவர் சங்கத்தினர் பேசுகையில், வனத்துறையினர் மேய்ச்சல் நிலங்களில் மாடு மேய்ப்பதற்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். மாடு மேய்ப்பதற்கே சிலர் சட்ட விரோதமாக பணம் வசூல் செய்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இவற்றை தடுக்க வேண்டும். மேய்ச்சல் பொருளாதார வாரியம் உருவாக்க வேண்டும் என்றனர். மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் கூறுகையில்,மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண் எடுப்பதற்கு எந்த வித சிக்கலும் இல்லாமல் பொதுப்பணித்துறையினர் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைகால நிவாரணத்தொகை 5 ஆயிரத்தை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் பேசுகையில், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உழவர் மையம் அனைத்து கிராமத்திலும் அமைக்க வேண்டும் என்றனர். கோரிக்கை மனுக்களை பெற்ற அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசுகையில், 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மனிதன் வாழ்வதற்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் விவசாயம் முக்கியம். விவசாயம் என்பது மிகப்பெரிய தொழில். அதேபோல் விவசாயத்திற்கு நீர் மிகவும் முக்கியம். நீர் ஆதாரத்தை உருவாக்க வேண்டும். தென்மாவட்ட விவசாய மக்கள் நலன் பெறுவதற்காக என்னுடைய ஆட்சியில் 14ஆயிரத்து 400 கோடியில் காவிரி குண்டாறு திட்டத்தை தொடங்கினேன். தி.மு.க., ஆட்சியில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2026 அ.தி.மு.க., ஆட்சியில் அந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். நீங்கள் கொடுத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
ரோட்டில் குப்பை அகற்றிய அ.தி.மு.க.,வினர்
திருப்புத்துார்: மதுரையில் முருகன் மாநாட்டில் நிகழ்ச்சி முடிந்ததுமே பங்கேற்றவர்களே குப்பையை அகற்றிச் சென்றனர். அது மக்களிடையே பொது சுகாதாரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதே போல நேற்று முன்தினம் திருப்புத்துாரில் நடந்த அ.தி.மு.க.,வின் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்ப்போம்' நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசி முடித்து சென்ற பின்னர் அங்கிருந்த சீருடை அணிந்த அ.தி.மு.க.,வினர் ரோட்டில் கிடந்த குப்பைகளை அகற்றினர். முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் துடைப்பத்துடன் பார்வையாளர்கள் விட்டுச் சென்ற குடிநீர் பாட்டில்,பாலிதீன் கவர், மட்டை, காகித குப்பைகளை பைகளில் எடுத்து சென்றனர்.