உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆத்தங்குடியில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்கால் தவிப்பு: மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கிராம மக்கள்

ஆத்தங்குடியில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்கால் தவிப்பு: மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கிராம மக்கள்

காரைக்குடி: காரைக்குடி ஆத்தங்குடியில் கடந்த ஆட்சியில் செயல்பட்டு வந்த மினி கிளினிக் மூடப்பட்டதால் கட்டடம் கருவேல மரங்கள் சூழ்ந்துஉள்ளது.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் வீணாகி வருகிறது.கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தங்குடியில் தயாராகும் பூக்கற்கள் புகழ் பெற்றவை. இத்தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இதேபோல் தேக்குமர பொருள்களால் ஆன கட்டில் பீரோ மேஜை உட்பட மரப்பொருட்கள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. அதிக தொழிலாளர்கள் வசித்து வரும் ஆத்தங்குடியில், ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. பின்னர் சுகாதார நிலையம் செயல்படாமல் போனதால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது அம்மா மினி கிளினிக் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பொதுமக்கள் உதவியுடன் பல லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு, மருத்துவமனையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டு 2 ஆண்டு செயல்பட்டு வந்தது. மினி கிளினிக் அப்போதைய அமைச்சர் பாஸ்கரனால் திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து தி.மு.க., ஆட்சி வந்ததால் கிளினிக் மூடப்பட்டது. பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனையை சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்ததோடு மருத்துவமனையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவமனை மூடப்பட்டதால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற முடியாமல் காரைக்குடி, திருமயம் உட்பட பிற பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒன்றிய கவுன்சிலர் சையது அப்தாகீர் கூறுகையில்: ஆத்தங்குடியில் 40 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. 2019ல் அம்மா மினி கிளினிக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஆட்சி மாற்றத்தால் அம்மா மினி கிளினிக் மூடப்பட்டு பயன்பாடின்றி கிடக்கிறது. இப்பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் சிரமப்படுகின்றனர். அம்மா மினி கிளினிக் இல்லாவிட்டாலும், மீண்டும் சுகாதார நிலையமாக மாற்றி செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மருத்துவ நிர்வாக அதிகாரி கூறுகையில்: ஆத்தங்குடியில் மருத்துவமனை அமைப்பதற்கு தனிநபர் ஒருவர் இடம் வழங்கியதால், தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய மருந்தகமாக செயல்பட்டு வந்தது. தொடர்ந்து, பொதுமக்கள் ஒத்துழைப்போடு மினி கிளினிக் தொடங்கப்பட்டது. தற்போது மினி கிளினிக் பயன்பாட்டில் இல்லை. மீண்டும் சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த இடம் முதலில் அரசுடமையாக்கப்பட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடுவதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ