காரைக்குடியில் சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணும் இடங்கள் தயார் பணி
சிவகங்கை: சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் பணி நடக்கும் காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து கலெக்டர் பொற்கொடி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் ஓட்டு பதிவு இயந்திரம், வி.வி., பேட் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் முடிந்ததும், ஓட்டு எண்ணும் பணி காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் தற்போது துவக்கியுள்ளனர். ஓட்டு எண்ணும் பணியில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறை' உள்ளிட்டவற்றை தயார்படுத்துவது குறித்து கலெக்டர் பொற்கொடி, எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். காரைக்குடி உதவி எஸ்.பி., ஆஷிஷ் புன்யா, சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியாதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * சிவகங்கை எலக்ட்ரானிக் ஓட்டுபதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணியை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். சிவகங்கை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோடவுனில் பெல்' நிறுவன இன்ஜினியர் சக்திவேல் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனையை மேற்கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியாதாஸ் உட்பட சர்வ கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.