| ADDED : ஜன 11, 2024 04:16 AM
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒன்பது உண்டியல்களும் கோசாலை உண்டியல் ஒன்றும் உள்ளது. 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம், நகை, வெள்ளி உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படும், கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி உண்டியல் எண்ணும் பணியின் போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகை திருட்டு போனது பிரச்னையானது.எனவே இம்முறை உண்டியல் திறக்கப்படும் போது திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவகங்கை அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வர்கள் அய்யனார், இசக்கிசெல்வம் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. காணிக்கை பணம் உள்ளிட்டவைகளை அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர். மொத்தம் ஒன்பது உண்டியல்களில் 24 லட்சத்து ஆறாயிரத்து 181 ரூபாய் ரொக்கமும், கோசாலை உண்டியலில் 97ஆயிரத்தி 543 ரூபாயும்,128 கிராம் தங்கமும், 499 கிராம் வெள்ளியும் கிடைத்தன.