| ADDED : டிச 06, 2025 02:15 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் 2012 மார்ச் முதல் நவ., வரை பிறந்த குழந்தைகளுக்கான பதிவு காணாமல் போனதால், பள்ளிக்கு பிறப்பு சான்று வழங்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். சிவகங்கையில் தி.மு.க., ஆட்சியில் 2012 பிப்., ல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துவக்கினர். மாதத்திற்கு இங்கு 300 குழந்தைகள் வீதம் பிறந்துள்ளனர்.2012 மார்ச் முதல் நவ., வரை 9 மாதங்களில் 2700 குழந்தைகள் இங்கு பிறந்தனர். அவர்களுக்கான பிறப்பு பதிவை மருத்துவமனை நிர்வாகம் பாதுகாப்பாக வைத்திருந்து, அந்தந்த கிராம வி.ஏ.ஓ.,விடமும், சுகாதாரத்துறையிடமும் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்களின் அடிப்படையில் தான் வி.ஏ.ஓ., பிறப்பு சான்றினை வழங்குவார்கள். இம்மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வாணியங்குடி வி.ஏ.ஓ., தான் பிறப்பு சான்று வழங்கியிருக்க வேண்டும். ஆனால், விதிகளுக்கு மாறாக வாணியங்குடி ஊராட்சி தலைவர் (கையால் எழுதப்பட்டது) பிறப்பு சான்று வழங்கியுள்ளார். 2012ல் பிறந்த குழந்தைகள் தற்போது 8 ம்வகுப்பு படித்து வருகின்றனர். அம்மாணவர்களின் விபரங்களை அந்தந்த பள்ளிகளில் எமிஸ்' பதிவு செய்து வருகின்றனர். மாணவர்களின் வயதை உறுதி செய்ய பிறப்பு சான்று கட்டாயம் என தெரிவிக்கின்றனர். ஆனால், வாணியங்குடி ஊராட்சியில் வழங்கிய பிறப்பு சான்று செல்லாது என பெற்றோர்களிடம் கூறியதால் அலைக்கழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர் கலெக்டர் பொற்கொடியிடம் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை என புகார் தெரிவிக் கின்றனர். கலெக்டரிடம் புகார் அளித்தும் வீணானது சிவகங்கை முஸ்தபா கூறியதாவது: என் மகன் அகமத் இம்ரான் 2012 ஏப்., 17ல் அரசு மருத்துவ கல்லுாரியில் பிறந்தார். அப்போது வாணியங்குடி ஊராட்சி தலைவர் பிறப்பு சான்று அளித்தார். அதை தற்போது தாசில்தாரிடம் கொடுத்து தமிழ், ஆங்கிலத்தில் இரு பிரதியாக பிறப்பு சான்று கேட்டால், ஊராட்சி தலைவர் வழங்கிய பிறப்பு சான்று செல்லாது. பிறப்பிற்கான ஆவணமும் இல்லை என தெரிவித்து புறக்கணிக்கின்றனர். கலெக்டரிடம் பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றார். காணாமல் போன பிறப்பு பதிவு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அக்கால கட்டத்தில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு தேதி, நேரம் விபரங்களை வழங்குமாறு மருத்துவ கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். ஆனால் அவர்கள் தொலைந்து விட்டதாக பதில் தருகின்றனர். இதனால் என்னசெய்வதென்று தெரியவில்லை என்றார்.