| ADDED : பிப் 21, 2024 11:47 PM
திருப்புத்துார், - திருப்புத்துாரில் வணிக,தொழில் நிறுவனங்களுக்கு முன் அறிவிப்பின்றி உரிமக்கட்டணம் அதிகரிப்பு குறித்து வர்த்தகசங்கம் பேரூராட்சியில் முறையீடு செய்தனர்.தற்போது பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தொழில்வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகளிடம் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்தும் பணியாளர்களால் கேட்கப்படுகிறது.தொழில் வரி எத்தனை சதவீதம் அதிகரிப்பு, எந்த தொழிலுக்கு எவ்வளவு வரி உயர்வு என்ற எந்தவித முன்னறிவிப்பின்றி, நேரிடையாக பணியாளர் மூலம் கடைகளில் வசூலிப்பது குறித்து நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடியை சந்தித்து வர்த்தக சங்கத்தினர் முறையிட்டனர். வர்த்தக சங்க தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் அப்துல்காதர், துணைத் தலைவர் உதயகுமார், கூடுதல் துணைத்தலைவர்கள் பிச்சைமுகமது,நாகராஜன், இணைச் செயலர்கள் ஹரிஹரன், முகமதுமீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரி அதிகரிப்பு விவரம் குறித்து வியாபாரிகளுக்கு தெரிவிக்கவும், மேலும் பிப்.17ல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பஸ் ஸ்டாண்டில் ஏடிஎம் வசதி ஏற்படுத்தவும் கோரினர்.