உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக பிரசார ஸ்டால்கள்

மடப்புரம் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக பிரசார ஸ்டால்கள்

திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக லட்டு, நெய்விளக்கு விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வர சிரமப்படுகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிகிழமையன்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள பிரசாத ஸ்டாலில் லட்டு, முருக்கு, அப்பம், எலுமிச்சை சாதம், பொங்கல், புளியோதரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இடத்தில் மட்டும் பிரசாத ஸ்டால் நடத்த டெண்டர் எடுத்து விட்டு ஆடி மாதத்தில் கூடுதலாக பிரகாரத்தில் மூன்று இடங்களில் பிரசாத ஸ்டால்களும், இரண்டு இடங்களில் நெய் விளக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி நெரிசலின்றி தரிசனம் செய்ய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடத்தில் தான் பக்தர்கள் சென்று வர வேண்டியுள்ளது. அதனையும் ஆக்கிரமித்து பிரசாதம், நெய்விளக்கு விற்பனை செய்வதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஏற்கனவே அம்மனை தரிசனம் செய்ய இரண்டு முதல் மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்து கிடக்க வேண்டியுள்ளது. மடப்புரம் கோயில் செயல் அலுவலர் கணபதி முருகன் கூறுகையில்: கோயில் வளாகத்தில் பிரசாத ஸ்டால் நடத்த ஒரு இடத்தில் மட்டும் தான் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் கூடுதலாக ஒரு இடத்தில் விற்பனை செய்யலாம், புகார் வந்துள்ளதால் வரும் காலங்களில் கூடுதல் இடங்களில் கடைகள் நடத்த அனுமதி கிடையாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ