| ADDED : டிச 27, 2025 05:40 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டாகுடியில் பாதுகாப்பு, விவசாயத்தை மீட்டு தந்தால் மீண்டும் குடியேறுவோம் என ஊரை காலி செய்த மக்களை மீட்டு கொண்டு வர நேற்று கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மாத்துார் ஊராட்சி நாட்டாகுடியில் 10 ஆண்டிற்கு முன்பு வரை 150 குடும்பத்தினர் வசித்தனர். வறட்சியால் விவசாயம் செய்ய நீரில்லாத காரணத்தால் குடும்பத்துடன் மதுரை, திருப்பூர், சிவகங்கைக்கு மக்கள் இடம் பெயர்ந்தனர். கடந்த சில ஆண்டிற்கு முன் வரை 55 குடும்பத்தினர் வந்தனர். இங்கு தொடர்ந்து 3 கொலைகள் நடந்ததால், அச்சத்தில் கடந்த ஆகஸ்டில் ஊரையே காலி செய்துவிட்டு சென்றனர். தமிழக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அங்கு பழுதாகி இருந்த 5000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து கொடுத்தனர். தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதோடு, மக்களின் பாதுகாப்பிற்கென 5 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள்' பொருத்தி, அவற்றை திருப்பாச்சேத்தி போலீசார் கண்காணிக்கும் விதமாக ஆன்லைன் மூலம் இணைத்துள்ளனர். இக்கிராமத்தில் தங்கி விவசாயம் செய்யவும், மகளிர் குழுவினர் கைவினை பொருட்களை தயாரிக்கவும், கால்நடைகள் வளர்க்க வங்கி கடனுதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் துார்வாரப்பட்டுள்ளன.இதையடுத்து நாட்டாகுடியில் 20 பேர் வரை மீண்டும் குடியேறியுள்ளனர். கலெக்டர் திடீர் 'விசிட்' சட்டசபை தேர்தல் வரவிருப்பதால், ஊரை காலி செய்துவிட்டு சென்ற நாட்டாகுடி மக்கள் மீண்டும் அக்கிராமத்தில் குடியேற இன்னும் எந்தவித வசதி செய்துதர வேண்டும் என நேரடி கள ஆய்வு செய்து அறிக்கை வழங்க கலெக்டர் பொற்கொடிக்கு, அரசிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை 4:00 மணிக்கு கலெக்டர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உட்பட அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் நாட்டாகுடிக்கு சென்ற னர். அங்கிருந்த மக்களிடம் அனைத்து குடும்பத்தை சேர்ந்தவர்களும் இங்கு குடியேற இன்னும் எந்தவிதமான தேவைகள் இருக்கிறது என கேட்டனர். இக்கூட்டத்தில் எடுத்த முடிவுபடி ஆடு, மாடு வாங்க வங்கி கடன், மகளிர் குழு கடன், போக்குவரத்திற்கு மினிபஸ் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர்.