நெருக்கடி! குறுகிய இடத்தில் காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட்; இடமில்லாமல் ரோட்டில் அணிவகுக்கும் பஸ்கள்
சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள முக்கிய நகர் காளையார்கோவில். இந்த நகரை மையமாக வைத்து சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தொண்டி, காரைக்குடி, பரமக்குடி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து காளையார்கோவிலை மையமாக வைத்தே நடக்கிறது. காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வெளியூர்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் டூவீலரில் காளையார்கோவில் வந்து அங்கிருந்து பஸ்களில் தேவகோட்டை, கல்லல், காரைக்குடி, சிவகங்கை செல்கின்றனர்.டூவீலர், கார்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்து விட்டது. மதுரை தொண்டி ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப், கல்லல் ரோடு விலக்கு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. மதுரை தொண்டி ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. பஸ்கள் நிறுத்துவதற்கு பஸ் ஸ்டாண்டில் போதிய இடம் இல்லாததால் மதுரை, தொண்டி, தேவகோட்டை செல்லும் பஸ்களை மதுரை தொண்டி ரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்கின்றனர். இதுதவிர பஸ் ஸ்டாண்டை சுற்றியே கடை வீதி இருப்பதால் கடைகளின் முன் சரக்கு வாகனங்களை நிறுத்துகின்றனர்.இதனால் காலை மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காளையார்கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு காளையார்கோவில் புறநகர் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.