| ADDED : ஜன 22, 2024 05:06 AM
தேவகோட்டை: ராமபிரானின் வாழ்வின் ஒரு பகுதி தேவகோட்டையை சுற்றி அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது.ராமன் வனவாசம் சென்றபோது இலங்கையை ஒட்டிய பகுதிக்கு வந்துள்ளார். அவர் தேவகோட்டை வழியாக வந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் மூலமே இப்பகுதியில் ஊர் பெயர்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக தேவகோட்டை கண்டதேவி, அனுமந்தக்குடி, இறகுசேரி, சூர்யன்குடியிருப்பு போன்ற ஊர்கள் புராணகாலத்தில் தோன்றியதாக வரலாறு உள்ளது. சீதையை ராவணன் தூக்கி சென்ற போது ஜடாயு தடுத்தார். அப்போது ராவணன், ஜடாயுவை வெட்டியதில் அவரது சிறகு விழுந்தது. இறகு சரிந்து விழுந்த இடம் தான் தற்போது இறகுசேரி. சிறகு விழுந்ததால் கண்டதேவியில் உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு முந்தைய பெயர் சிறிகிழிநாதர் என அரசு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைக்கும் கண்டதேவி கோயில் கோபுரத்தில் சீதையை தூக்கிச் செல்வது, சிறகு விழுவதுபோன்ற பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனுமன் வம்சம் வாழ்ந்ததால் அனுமந்தக்குடி என்றும், ராமர் சூர்ய குலத்தை சேர்ந்தவர் என்பதால், இங்கு சூர்யன்குடியிருப்பு, அனுமன் இலங்கை சென்று சீதையை பார்த்து விட்டு கண்டதேவியில் முகாமிட்டுள்ளார். அப்போது ராமனிடம் அனுமன் கண்டேன் தேவியை என சொன்னதால், கண்டதேவி ஆனது. ராமர் கண்டதேவி கோயில் ஊரணியில் ஜடாயு இறப்பிற்கு காரியம் செய்ததாலும், சிறகில் ரத்தம் வழிந்த இந்த ஊரணிக்கு ஜடாயு தீர்த்தம் என்ற பெயர் உண்டு. ராமன் காரியம் செய்த ஊரணி என்பதால், அமாவாசை தர்ப்பணம் இங்கு அதிகளவில் செய்யப்படும். இங்கிருந்த ராமர், தீர்த்தாண்ட தானம் வழியாக உப்பூர் சென்று வெயிலுகந்த விநாயகரை தரிசித்த பின், சீதையை மீட்கும் போரில் ஈடுபட்டதாக வரலாறு கூறப்படுகிறது.