உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுப்பன் கால்வாயை ரூ.9.80 கோடியில் துார்வார திட்ட மதிப்பீடு தயார்

சுப்பன் கால்வாயை ரூ.9.80 கோடியில் துார்வார திட்ட மதிப்பீடு தயார்

மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட சுப்பன் கால்வாயை துார்வாரி செயல்படுத்த ரூ.9.80 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மானாமதுரை வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் சுப்பன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.வைகையில் உபரியாக கலக்கும் நீரை திருப்பி விட உப்பாற்றில் கள்ளர்குளம் என்னும் இடத்தில் சுப்பன் கால்வாய் கட்டும் திட்டத்தில் அணை கட்டப்பட்டு கால்வாய் வெட்டப்பட்டது.இத்திட்டத்தால் மானாமதுரை,இளையான்குடி தாலுகாவில் 40க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மூலம் 8000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது உப்பாற்றில் பெருவெள்ளம் ஓடி அது வைகை ஆற்றில் வீணாக கலந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் இளையான்குடி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் பேச்சு வார்த்தை இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையிலும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் இளையான்குடி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் ரூ.9.80 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை