மடப்புரம் சென்று திரும்பும் பஸ்களால் டீசல் விரயம்
திருப்புவனம் திருப்புவனத்தில் தினசரி மதியம் அரசு டவுன் பஸ்கள் மடப்புரம் பணிமனை சென்று திரும்புவதால் டீசல் விரயமாகி வருகிறது. மதுரை கோட்டத்தின் திருப்புவனம் கிளை பணிமனை மூலமாக 44 டவுன்பஸ்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதில் பழுதடைந்த டவுன் பஸ்களுக்கு பதில் தொலை தூர பஸ்கள் சில வாங்கி இயக்கப்படுகின்றன. 44 டவுன் பஸ்கள் இருந்தாலும் தினசரி அதிகபட்சமாக 30 பஸ்கள் வரையே இயக்கப்படுகின்றன. தினசரி இரண்டு முதல் ஐந்து முறை கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று வரும் வகையில் பஸ்களின் நேரம் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி மதிய நேரத்தில் கண்டக்டர், டிரைவர்கள் பணி மாற திருப்புவனத்தில் இருந்து மடப்புரம் பணி மனைக்கு சென்று, திரும்பி வர மூன்று கி.மீ., தூரம் ஆகிறது. பஸ்கள் பயணிகள் இன்றி போய் வருகின்றன. ஒரு பஸ்சிற்கு ஒரு லிட்டர் டீசல் வீதம் 30 பஸ்களுக்கு தினசரி 30 லிட்டரும் மாதம் தோறும் 900 லிட்டர் டீசல் விரயமாகிறது. கிராமங்களில் இருந்து வரும் போதே திருப்புவனம் வரை மட்டும் என்பதால் பயணிகள் வேறு பஸ்களில் பயணம் செய்வதால் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே திருப்புவனத்திலேயே கண்டக்டர், டிரைவர்கள் பணி மாற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கட்டணமில்லா பேருந்துகளால் பணிமனை களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இன்றி செலவீனமும் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து கழகங்கள் செலவீனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதாகி நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பஸ்களையும் சரி செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.