UPDATED : நவ 25, 2025 02:31 AM | ADDED : நவ 25, 2025 02:30 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே காட்டுப்பகுதியில் கேக்வெட்டி கொண்டாடிய வழிப்பறி கொள்ளையர்களை ட்ரோன் கேமரா உதவியுடன் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகங்கை அருகே கீழக்குளம் காட்டுப்பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட போவதாகவும், அதற்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் வர உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, சரவணன், எஸ்.ஐ.,க்கள் சக்திவேல், செல்வபிரபு, சிவபிரகாஷ் உள்ளிட்ட 40 போலீசார் அடங்கிய தனிப்படையை எஸ்.பி., சிவபிரசாத் அமைத்தார். காட்டுபகுதியாக இருந்ததால் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு போலீசார் கண்காணித்தனர்.அங்கு 10க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் சுற்றி வளைத்தனர்.போலீசாரை கண்டதும் அவர்கள் ஓட தொடங்கினர். இதில் சரவணன் மற்றும் பால்பாண்டி பிடிபட்டனர். மீதமுள்ளவர்கள் தப்பினர்.அவர்களிடம் இருந்து 2 வாள், 5 டூவீலர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் சிவகங்கை தாலுகா மற்றும் நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் இரண்டு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த மார்ச்சில் இதே கீழ்க்குளம் பகுதியில் நான்கு நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.