உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் வைகையில் மழை தண்ணீர் கூட வரவில்லை விவசாயிகள் வேதனை

திருப்புவனம் வைகையில் மழை தண்ணீர் கூட வரவில்லை விவசாயிகள் வேதனை

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் வழக்கமாக வரும் மழைத்தண்ணீர் கூட வராதது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வைகை ஆற்றங்கரையை ஒட்டி திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், கானுார், மாரநாடு உள்ளிட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழையை நம்பி 10 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதமே நாற்றங்கால் அமைக்க தொடங்கி விடுவார்கள், நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்கு பின் அதனை பறித்து நடவு செய்வது வழக்கம்.அதற்குள் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி விடும், வடகிழக்கு பருவமழை காலங்களின் போது மதுரை, தேனி மாவட்டங்களில் மழை பெய்யும் நாட்களில் வைகை ஆற்றில் மழை நீர் வரத்து செப்டம்பரில் தொடங்கி விடும்.வைகை அணையில் இருந்து நீர் திறப்பிற்கு முன்னதாக மழைதண்ணீர் வருவதால் ஓரளவிற்கு வைகை ஆறு ஈரப்பதம் காண்பதுடன் திருப்புவனம்,மாரநாடு, பிரமனூர், கானூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர் வரத்து தொடங்கி விடும், ஆனால் இந்தாண்டு வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யாததுடன் திருப்புவனம் வட்டாரத்திலும் மழை இல்லை.வடகிழக்கு பருவமழை அக். 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போதிய மழை இல்லாதது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் துறையினரிடம் இருந்து விதை நெல் வாங்கிய விவசாயிகள் வயல்களில் உழவு பணிகள் கூட மேற்கொள்ளவில்லை. வைகை அணையில் தண்ணீர் திறந்தால் கூட கண்மாய்களுக்கு போதிய தண்ணீர் வர வாய்ப்பில்லை என்றே விவசாயிகள் கருதுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில்: செப்டம்பரில் அனைத்து கண்மாய்களிலும் மழை தண்ணீர் தேங்கி விடும், இந்தாண்டு மழை பெய்யாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வராததுடன் மற்ற பகுதி மழை தண்ணீர் கூட வைகையில் வரவில்லை.வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இனி வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யுமா என தெரியவில்லை. கிணற்று பாசன விவசாயிகள் மட்டும் ஓரளவிற்கு நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்தாண்டு இரண்டாயிரம் ஏக்கரில் நடவு பணிகள் நடந்தாலே பெரிய விஷயம் என வேதனையுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி