| ADDED : டிச 27, 2025 05:42 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே மாரந்தையில் போதிய தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிர்களுடன் சிவகங்கை கலெக்டர் பொற் கொடியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மாரந்தை கிராமத்தில் 250 ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால், பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரினை கண்மாய்களில் தேக்கி அதன்மூலம் ஒரு போக நெல் சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு பருவ மழையை வைத்து விவசாயிகள் மானாவாரியாக நெல் நடவு செய்துள்ளனர். தற்போது இந்த பயிர் முளைத்து விளைந்து வருகிறது.தொடர்ந்து மழை இல்லாததால், பயிர்களை காப்பாற்ற மாரந்தை பொதுப்பணித்துறை கண்மாயில் தேங்கியுள்ள நீரை பம்ப்செட் மூலம் முறைவைத்து பாய்ச்ச கிராமத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் சிலர் மாரந்தை வி.ஏ.ஓ.,விடம் புகார் தெரிவித்து, கண்மாயில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற நீர் எடுக்க முடியாத வகையில் தடை விதித்து விட்டனர். இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே விளைந்த நெற்பயிர்களை பாதுகாக்க கண்மாயில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மாரந்தை கிராம விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களுடன், நேற்று சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர். அவர் பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.