பறவைகளால் நெற்பயிருக்கு பாதிப்பு காவலாளி வைத்து விரட்டும் விவசாயிகள்
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் செவ்வூரில் கோடை சாகுபடியில் நெற்பயிரை கொக்குகளிடமிருந்து பாதுகாக்க தொழிலாளர்களை காவலுக்கு நியமித்து விவசாயிகள் கூடுதல் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திருப்புத்துார் வானம் பார்த்த பூமி. இங்கு ஒரு போக நெல் சாகுபடியே விவசாயிகளுக்கு சவாலானது. இருப்பினும் சில விவசாயிகள் மழையை மட்டும் நம்பாமல் கிணற்றை நம்பி இரண்டு போகம் நெல் சாகுபடி செய்கின்றனர். செவ்வூரில் 3 ஏக்கரில் குண்டு நெல் சாகுபடி செய்த வயலில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள களைகளை தொழிலாளர்கள் மூலம் அகற்றினர். விவசாயி வெண்ணிலா கூறுகையில், களை எடுப்பது, உரம் போடுவது, பூச்சி மருந்து தெளிப்பது போல கொக்குவிரட்டுவதற்காகவும் கூடுதல் செலவு செய்ய வேண்டிய வேலையாகி விட்டது.முன்பெல்லாம் சிறிய கொக்குகள் பூச்சி,புழுக்களை பிடிக்க வயல்களுக்கு வருவது வழக்கம். தற்போது வரும் வெளிநாட்டு பறவைகள் பெரிய அளவில் உள்ளதால் இவை வயல்களில் இறங்கும் போது பயிர்கள் அமுங்கி பாதிக்கப்படுகிறது.கொக்கை விரட்டவே தினசரி ரூ.300 கூலி கொடுத்து ஆட்களை காவலுக்கு வைக்க வேண்டியுள்ளது. ஒரு வாரம் விரட்டிய பிறகு கொக்குகள் வருவது குறைந்துள்ளது' என்றார் முன்பெல்லாம் கொக்குகள் உழுத வயல்களில் புழு, பூச்சிகளை தின்று உதவின. விதைத்த பிறகு விதைகளை தின்னாமல் தடுக்க கொக்கை விரட்ட வயல்களில் வெள்ளைக் கொடிகளை கட்டி வைப்பது வழக்கம்.தற்போது வருவது வெள்ளை கொக்கு மட்டுமல்ல. அரக்கு, கருப்பு வண்ணம் கலந்த பெரிய பறவைகள் கொடிகளை கட்டினாலும் பொருட்படுத்தாது வயல்களில் இறங்குகின்றன.இவைகளின் பெரிய இறகுகள் பயிரை அழுத்தி சேதமாக்குகிறது. இதனால் விவசாயிகள் ஆட்களை வைத்து விரட்டி வருகின்றனர்.