உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காலி இடங்களில் எல்லாம் கொட்டப்படும் குப்பை

காலி இடங்களில் எல்லாம் கொட்டப்படும் குப்பை

திருப்புவனம்: திருப்புவனத்தில் காலியாக கிடக்கும் இடங்களில் எல்லாம் பேரூராட்சி பணியாளர்கள் குப்பையை கொட்டி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். திருமண மண்டபம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என ஏராளமானவை திருப்புவனத்தில் செயல்பட்டு வருகின்றன. தினசரி ஆறு டன் குப்பை வரை சேகரிக்கப்படுகின்றன. குப்பை அனைத்தையும் திருப்புவனம் மயானம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அதனை தரம் பிரித்து அழிப்பது மற்றும் மறுசுழற்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு தற்காலிக பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.ஆனால் இன்று வரை குப்பை தரம் பிரிக்கப்படவே இல்லை. தினசரி ஆறு டன் முதல் பத்து டன் குப்பை வரை கொட்டி குப்பை கிடங்கில் மலை போல குவித்து வைத்துள்ளனர். குப்பைகளை தரம் பிரிக்க நியமிக்கப்பட்ட பணியாளர்கள் பலரும் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து செல்வதுடன் சரி வேறு எந்த பணியும் செய்வதில்லை. இதனால் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் காலி இடங்களில் எல்லாம் கொட்டி வருகின்றனர்.திருப்புவனத்தில் பைபாஸ் ரோடு, புதூர் வைகை ஆறு, செல்லப்பனேந்தல் விலக்கு, மடப்புரம் விலக்கு, திதி பொட்டல் ஆகிய இடங்களில் எல்லாம் குப்பை கொட்டப்பட்டு மலை போல குவிந்து கிடக்கின்றன. மழை காரணமாக குப்பை அனைத்திலும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு நிலவி வருகிறது.இந்நிலையில் பேரூராட்சி பணியாளர்கள் நான்கு வழிச்சாலையை ஒட்டிய காலி இடங்களில் குப்பைகளை கொட்ட தொடங்கியுள்ளனர். நரிக்குடி விலக்கு தொடங்கி பிரமனுார் விலக்கு வரை குப்பைகளை தொடர்ச்சியாக கொட்டி குவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரிக்க என நியமிக்கப்பட்ட பணியாளர்களை வேறு பணிக்கு அனுப்பாமல் குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை