சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் கட்டப்படும் அரசு கட்டட பணிகள் அனைத்தும் நிறைவு பெறாமல் நீண்ட இழுவையாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகங்கை நகராட்சியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க கட்டுமான பணி, வாரச்சந்தை புதுப்பித்தல் பணி, நேருபஜார் தினசரி சந்தை கட்டுமான பணிகள் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் நிதியிலிருந்து கட்டப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் பணி மந்தம்
நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022--23 நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் 18 கடைகள், பொதுக்கழிப்பறை, பஸ் ஸ்டாண்ட் தரைத்தளம் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய இந்த பணி கடந்த இரண்டு வருடங்களாக நடக்கிறது. தற்போது வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துாசியாகவே காணப்படுகிறது. மழை பெய்தால் சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் பஸ் பயணிகள் சிரமப்படுகின்றனர். வாரச்சந்தை புதுப்பிப்பு
2022--23 நகர் புற மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 3 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு 152 காய்கறி கடைகளும், 12 மீன் கடைகளுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணி முடிவடைந்த நிலையில், தரை தளத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணியும், எலக்ட்ரிக்கல் பணியும் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் பொது நிதியிலிருந்து நிதியை சரியாக கொடுத்தால் கட்டுமான பணியை விரைவில் முடித்து விடுவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வாரச்சந்தை கட்டுமான பணி முடியாமல் இருப்பதால் வாரச்சந்தையான புதனன்று காய்கறி கடைகள் அனைத்தும் ரோட்டில் நெருக்கடியில் நடக்கிறது.தினசரி சந்தைநேரு பஜாரில் உள்ள தினசரி சந்தை ரூபாய் 3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 100 கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், கேன்டீன், பாதுகாவலர் அறை, பொதுகழிப்பறை, பேவர் பிளாக் தரைத்தளம் உள்ளிட்டவை அமைய உள்ளது. 9 மாதத்தில் பணியை முடிக்க உள்ள நிலையில் தற்போது 40 சதவீத பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 60 சதவீதம் பணி நடைபெற்று வருகிறது.கமிஷனர் கிருஷ்ணராம் கூறுகையில், வாரச்சந்தை பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. அடுத்த மாதத்திற்குள் பணி முடிந்து விடும். பஸ் ஸ்டாண்ட் பணியை நேற்று தான் பார்வையிட்டேன் .விரைவில் பணி முடிக்கப்படும். தினசரி சந்தையில் தற்போது தான் கட்டுமான பணி நடந்து வருகிறது. அது குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றார்.சிவகங்கை நகராட்சியில் தொடர்ந்து பணி செய்ய கமிஷனர் இல்லாத நிலையிலும், இந்த பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் இல்லாததால் கடந்த ஒன்றரை வருடமாக மக்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.