உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / படுகை அணையால் உயரும் நிலத்தடி நீர்மட்டம்

படுகை அணையால் உயரும் நிலத்தடி நீர்மட்டம்

திருப்புவனம்: திருப்புவனம் புதுார் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வைகை ஆற்றின் குறுக்கே பாசனத்திற்காகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக திருப்பு வனம் புதூரில் வைகை ஆற்றின் குறுக்கே 410 மீட்டர் நீளமுள்ள படுகை அணை 40 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. வலதுபுறம் பழையனுார் கண்மாய்க்கு இரண்டு ஷட்டர்களும், இடது புறம் கானுார் கண்மாய்க்கு நான்கு ஷட்டர்கள் மூல மாகவும் தண்ணீர் திறக்கப் பட உள்ளது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பின் போதும், மழை காலங்களிலும் படுகை அணையில் தண்ணீர் தேங்கி நின்று அதன்பின் ஷட்டர்கள் வழியாக வெளியேறும், கானுார், பழையனுார் கண்மாய்களுக்காக வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு உயரமாகவும் வைகை ஆறு பள்ளமாகவும் மாறிவிட்டபடியால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு விவசாயிகள் சிரமப் பட்டனர். கானுார், பழையனுார் கண்மாய் பாசனத்திற்காக கட்டப்பட்டுள்ள இந்த படுகை அணையால் திருப்புவனம் புதுார், மணல்மேடு, மடப்புரம், பெத்தானேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 200 அடி முதல் 300 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் தற்போது 100 முதல் 150 அடிக்குள்ளாகவே தண்ணீர் கிடைத்து வருவதுடன் விவசாய மோட்டார்களை 24 மணி நேரமும் இயக்க முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ