உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வட்டியுடன் அசலை கட்டியும் திரும்பாத நகை: அமைச்சர் மாவட்டத்தில் அவலம்

வட்டியுடன் அசலை கட்டியும் திரும்பாத நகை: அமைச்சர் மாவட்டத்தில் அவலம்

சிவகங்கை: மாவட்டத்தில் உள்ள 125 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் சில ஆண்டுகளுக்கு முன் 5 வங்கிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக திருநெல்வேலி கூட்டுறவு குற்ற தடுப்பு போலீசாரால் விசாரணை நடந்து வருகிறது. இதனால்,5 வங்கிகளில் அடகு வைத்து அதற்கான வட்டியுடன் அசல் தொகையை கட்டியவர்களுக்கு நகை திரும்ப கிடைக்கவில்லை.கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பனின் மாவட்டத்திலேயே முறைகேட்டில் ஈடுபட்ட சங்க அதிகாரிக ள் மீது நடவடிக்கை இல்லாமல், சங்கம் முடங்கி கிடப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) விஜயகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கலெக்டர் பி.ஏ., (விவசாயம்) தனலட்சுமி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார் குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம் சந்திரன், சிவகங்கை: பெரியாறு பாசன விரிவாக்க பகுதியான ஏரியூர், மதகுபட்டி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்.இன்னும் பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கன்னியப்பன், கீழநெட்டூர்: தனியார் உரக்கடைகளில் ரூ.400க்கு மண்புழு உரம் தரமறுத்து வாளி வாங்கினால் தான் விவசாயிக்கு 2 மூடை யூரியா தர முடியும் என நிர்பந்திக்கின்றனர். இது போன்ற புகாருக்கு வேளாண் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேளாண்மை இணை இயக்குனர்: இது போன்று விவசாயிகளை நிர்பந்தித்த தனியார் உரக்கடை களின் லைசென்சை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஆபிரகாம், காளையார்கோவில்: காவிரி- குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை அரசு விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் மூலம் வலியுறுத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரி: இத்திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ரூ.13,500 கோடி திட்டமதிப்பீடு தயாரித்து வைத்துள்ளனர். பணிகள் படிப்படியாக நடைபெறும். மாணிக்கவாசகம், மானாமதுரை: கட்டிக்குளம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.32 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை அருகே வரத்து கால்வாய் ஷட்டரை உயர்த்தி கட்டியதால், பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. அய்யாச்சாமி, இளையான்குடி: விரகனுார் மதகணை முதல் பார்த்திபனுார் மதகு அணை வரை வைகை ஆற்றில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணதேவர், மானாமதுரை: மானாமதுரையில் 56 கண்மாய்களுக்கு வரும் மழை நீரை தடுக்கும் விதமாக வனத்துறையினர் யூகலிப்டஸ் மரங்களை வளர்த்து, மரங்களுக்காக பள்ளம் தோண்டியுள்ளதால், கண்மாய்க்கு நீர் வரத்தில்லை. ஆதிமூலம், திருப்புவனம்: கண்மாய்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வருவாய் துறை மட்டுமே ஏலம் விட்டு வந்தனர். தற்போது வனத்துறை ஏலம் விடுவதால் பல சட்ட சிக்கல் ஏற்பட்டு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்கின்றன. இதை தவிர்க்க கண்மாயில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றுவதற்கான ஏலம் விடும் உரிமையை வனத்துறையிடமிருந்து ரத்து செய்ய வேண்டும். ராஜேந்திரன், கண்ணங்குடி: கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட மாடுகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. முத்துராமலிங்கம், வேம்பங்குடி: சிவகங்கை அருகே வேம்பங்குடி கண்மாயை நம்பி 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இக்கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கலெக்டர்: கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய், பொதுப்பணி, சர்வே துறை ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு வாரத்திற்குள் அகற்றிட வேண்டும். ஆதிமூலம், திருப்புவனம்: மாவட்ட அளவில் உள்ள 125 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் 10 ஆண்டிற்கு முன் 5 வங்கிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக திருநெல்வேலியில் உள்ள கூட்டுறவு குற்ற தடுப்பு போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், 5 வங்கிகளில் அடகு வைத்து, அதற்கான வட்டியுடன் அசல் தொகையை கட்டியவர்களுக்கு நகை திரும்ப கிடைக்கவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும். கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்திலேயே முறைகேட்டில் ஈடுபட்ட சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லாமல், சங்கம் முடங்கி கிடப்பது வேதனை அளிக்கிறது. கலெக்டர்: இது குறித்து கூட்டுறவு குற்ற தடுப்பு போலீசார், கூட்டுறவு துறை, சம்பந்தப்பட்ட வங்கி செயலர்கள் ஒன்று கூடி பேசி பணத்தை செலுத்தியவர்களுக்கு நகையை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திரன், இளையான்குடி: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.2 லட்சம் கடன் தர வேண்டும் என அரசு உத்தரவிட்டும், சங்க செயலர்கள் ரூ.1.60 லட்சம் மட்டுமே தருவதோடு, எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என தெரிவிக்கின்றனர், இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ