முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
சிவகங்கை: கந்த சஷ்டி விழா மாவட்ட அளவில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட, சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தினமும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அக்., 27 அன்று காலை வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருக்கல்யாணமும், மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும் நடைபெறும். சிவகங்கை அருகே கோவானுார் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அக்., 27 அன்று காலை திருக்கல்யாணம் நடைபெறும். * குன்றக்குடி: சண்முகநாத பெருமான் கோயிலில் சுவாமிக்கு காப்பு கட்டுடன் நேற்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தினமும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகநாத பெருமானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெறும். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெறும். அக்., 27 அன்று மாலை 4:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். * திருப்புத்துார்: திருத்தளிநாதர், யோகபைரவ சுவாமி கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டு தலுடன் நேற்று கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அக்., 27 அன்று மாலை 4:30 முதல் 6:00 மணிக்குள் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் கீழரதவீதி சீரணி அரங்கம் முன் நடைபெறும். அக்., 28 அன்று காலை 10:40 முதல் 11:30 மணிக்குள் தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடைபெறும்.