கோட்டையம்மன் கோயில் ஆடி திருவிழா நிறைவு
தேவகோட்டை : தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 21ல் மேடை போடுதலுடன் தொடங்கியது. அம்மன் பிரதிஷ்டை செய்து தினமும் பீடத்திற்கு பல அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. ஆடி முதல் செவ்வாய் முதல் பொங்கல், 2வது செவ்வாய் புள்ளி பொங்கல் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது பொங்கல் வைத்து பூஜைகள் நடந்தன. திருவிழாவில் ஆயிரக் கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விளக்கு பூஜை, பால் குடம், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழா நாட்களில் உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து சுவாமி தரி சனம் செய்தனர். நிறைவு நாளான நேற்று காலை ஆறு மணியளவில் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகளை தொடர்ந்து கோட்டை அம்மனை பூஜாரி தியாகராஜன் சுமந்து வர மற்ற பொருட்களை பூஜாரிகள் சுமந்தபடி வீதி உலா வந்தனர். நிறைவாக கோயில் அருகே உள்ள ஊரணி படித்துறையில் அம்மனுக்கு பூஜையை தொடர்ந்து அம்மனை பூஜாரிகள் நீரில் வைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.