l வேட்டங்குடி சரணாலயத்திற்கு பறவைகள் வருகைகுறைந்தது
திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ.,துாரத்தில் உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். முன்பு கொள்ளுகுடி,சின்னகொள்ளுகுடி,வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களில் பறவைகள் வந்து தங்கின. தற்போது கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் மட்டும் பறவைகள் தங்குகின்றன. வரத்து குறைந்தது
குளிர் பிரதேசங்களைச் சேர்ந்த கொக்கு,நாரை,வாத்து இன பறவைகள் இங்கு வருகின்றன. வழக்கமாக ஆகஸ்டில் பறவைகள் வரத்துவங்கும்.மார்ச் மாதத்திற்கு மேல் கோடைகாலத்தில் பறவைகள் திரும்பி செல்லும்.இடைப்பட்ட காலத்தில் கண்மாயிலுள்ள மரங்களில் கூடு கட்டி இனவிருத்தி செய்யும். கண்மாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நீர் இருப்பை பொறுத்து அவை இங்கு தங்கும் காலத்தை வைத்துக்கொள்ளும்.இந்த ஆண்டு ஆகஸ்ட் 3வது வாரத்தில் பறவைகள் வரத்துவங்கின. நத்தை கொத்தி நாரை, கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள் வந்துள்ளன. மேலும் வெண் கொக்கு, சிறிய,நடுத்தர கொக்குகள், நீர்காகம்,முக்குளிப்பான்,வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகளும் வந்துள்ளன. போதிய அளவில் மழை இல்லாததாலும், சுற்று வட்டாரக் கண்மாய்களில் நீரின்றி விவசாயப் பணி நடக்காததாலும் பறவைகள் வருகை அதிக அளவில் இல்லை. வரும் காலங்களில் மழை பெய்தால் பறவைகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொலிவிழந்த சரணாலயம்
கொள்ளுகுடிப்பட்டி கண்மாய் பகுதி போதிய பராமரிப்பில்லாததால் பறவைகள் வருகை குறைந்துள்ளதோடு, சரணாலயம் பொலிவிழந்தும் காணப்படுகிறது. கண்மாயில் தேங்கியுள்ள நீரை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. 80 ஆண்டுகளான இரு மடைகள் சேதமடைந்ததால் நீர் சேமிப்பு கேள்விக் குறியாகி விட்டது. மழை பெய்தாலும் கண்மாயில் முழுமையாக நீரை சேமிக்க முடியவில்லை. கிராமத்தினர் பல முறை கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.கொள்ளுகுடிப்பட்டி மகேஸ்வரி கூறியதாவது; சரணாலயத்திலுள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் 2 மடைகள் துார்ந்து விட்டன. சின்னக் கண்மாயிலும் இதே போன்று மடைகளை பராமரிக்கவில்லை. மோட்டார் வைத்து தான் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. பராமரிக்கப்படாத மடையால் நீர் வீணாக வெளியேறுகிறது. கண்மாயில் நீரை சேமிக்க முடிவதில்லை. மூன்று ஆண்டுகளாக கோருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை.புதுக்கோட்டை ஸ்ரீராம் கூறியதாவது; இப்பகுதிக்கு வரும் போது இந்த சரணாலயத்தில் பறவைகளை பார்ப்பேன். முன்பு போல இப்போது அதிக அளவு பறவைகள் வரவில்லை. வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்து விட்டன. சில வகை நாரைகள் வரவில்லை. சரணாலய பராமரிப்பும் சரியாக இல்லை. சிமென்ட் இருக்கைகள் சேதமாகி விட்டன. பார்வையாளர்களுக்கு உதவ வழிகாட்டிகள் தேவை. ரூ 3.75 கோடியில் வளர்ச்சி பணி
வன அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில்; கிடைத்துள்ள நிதியில் மேலக்கண்மாயிலிருந்து கொள்ளுக்குடிப்பட்டிக்கு 2.5 கி.மீ.துாரத்திற்கு வரத்துக்கால்வாய் புனரமைக்கப்படும். 3 கண்மாய்களிலும் வலைக் கம்பி வேலியிடப்படும். நடைபாதைகளில் பேவர் பிளாக் அமைக்கப்படும். பார்வையாளர் மாடத்தில் கூடுதல் அறை கட்டப்படும்' என்றார்.குறைவான நிதியால் வனத்துறையினர் மடைகள் புனரமைப்பு, சிறுவர் பூங்கா புனரமைப்பு போன்ற பணிகளை நிறைவேற்ற முடியாது. அதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் நிதி கேட்டுள்ளது. இதனால் இப்பணிகள் மேலும் தாமதமாகிறது. பார்வையாளர்கள் பொழுது போக்கிற்கு பயன்பட்ட சிறுவர் பூங்கா சீர்குலைந்த நிலையில் உள்ளது.கண்மாயினுள் காய்ந்துள்ள மரங்களை அகற்றாததும் பார்வையாளர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. உயரமான மரங்கள் குறைந்து விட்டதால் பெரிய பறவைகள் கூடு கட்ட வசதியில்லாமல் போய்விட்டது. மேலும் குரங்குகள் நடமாட்டமும் குறையவில்லை.சுற்று வட்டார வயல்களில் நீர் பாய்ச்சி உழவு செய்து நாற்றங்கால் முறையில் விவசாயம் நடக்கவில்லை. நேரடி விதைப்பில் வயல்கள் வறண்டுள்ளது. வயல்களில் காணப்படும் புழு,பூச்சிகள் இல்லாததும் பறவைகள் வரவு குறைவதற்கு காரணமாக கூறப்படுகிறது. மாற்று ஏற்பாடாக மீன் குஞ்சுகள் கண்மாயில் இரைக்காக விடப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் வனத்துறையுடன் இணைந்து சரணாலயம் புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.