மழை நீர் வரத்தால் கடல் போல் காட்சியளிக்கும் கண்மாய்
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கண்மாய்க்கு தொடர்ச்சியாக வந்த மழை நீரால் கண்மாய் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான மாரநாடு கண்மாயை நம்பி மாரநாடு, வெள்ளிக்குறிச்சி, கச்சநத்தம், விளத்துார் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாசன நிலங்களும் பயன் பெறுகின்றன.வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது மாரநாடு கண்மாய்க்கும் தண்ணீர் திறக்கப்படும்.மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக லாடனேந்தல் அருகே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆறு கி.மீ.,துாரத்திற்கு பாசன கால்வாய் அமைத்து கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 2014ல் ஆறு கோடி ரூபாய் செலவில் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் துார் வாரப்பட்டது.2020ல் 97 லட்ச ரூபாய் செலவிலும் துார் வாரப்பட்டது. கடந்த ஒரு மாதமாக வைகை ஆற்றில் மழை தண்ணீர் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து விவசாயிகள் கண்மாய்க்கு மழை தண்ணீரை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மாத காலத்தில் கண்மாய் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. கண்மாய் நிரம்பியதால் அதனை நம்பியுள்ள விவசாயிகளும் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுள்ள கண்மாய் தண்ணீர் இரண்டு மாத பாசனத்திற்கு பயன்படும் என்ற நிலையில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரும் கண்மாய்க்கு வர இருப்பதால் இந்தாண்டு மாரநாடு கண்மாயை நம்பியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் நெல் விவசாயம் முழுமையடையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.