நீட் தேர்ச்சி: 11 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம்
சிவகங்கை; நீட் தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 140 பேர் தேர்வான நிலையில் இவர்களில் 11 பேருக்கு மருத்துவத்தில் இடம் கிடைத்துள்ளது. தேசிய தேர்வு மையம் சார்பில் நீட் தேர்வு மே 4ல் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1630 பேர் தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளியை சேர்ந்த 140 பேர் தேர்வாயினர். இவர்களில் கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளி மாணவன் கோகுல் குகன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரியும், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஓவியா கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லுாரியும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி துர்கா தேவி விருதுநகர் மருத்துவக் கல்லுாரியும், மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பைரவி சென்னை தாகூர் மருத்துவக் கல்லுாரியும், பீர்கலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் மதன்ராஜ் பெரம்பலுார் தனலெட்சுமி மருத்துவக் கல்லுாரியும், அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மோகன்ராஜாவிற்கு சென்னை கற்பகம் மருத்துவக் கல்லுாரியிலும், கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளி மாணவி யோசினிக்கு வேலுார் சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, பீர்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சிவாவிற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி, காரைக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பாரதிக்கு மதுரை சி.எஸ்.ஐ., டெண்டல் மருத்துவக் கல்லுாரியும், கொல்லங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சோனாசென் சென்னை செட்டிநாடு டெண்டல் மருத்துவக் கல்லுாரியிலும் இடம் கிடைத்துள்ளது. தேர்வான மாணவர்களை நீட் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாரிமுத்து பாராட்டினர்.