சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் - - மதுரை ரோட்டில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அறிவுசார் மையம் செயல்படுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு மட்டுமின்றி, வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கான வரப்பிரசாதமாக இந்த மையம் அமைந்துள்ளது. நவீன வசதிகள்
நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கான அனைத்து பயிற்சி புத்தகங்கள், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் இங்கு வாசகர்களின் பயன்பாட்டிற்காக உள்ளன. கவனச்சிதறலின்றி படிக்க எழுத மேஜையுடன் கூடிய தனி கேபின் வசதியும் உள்ளது. படிக்க வசதியாக கீழ் தளம் மட்டுமின்றி, முதல் தளமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இணையம் மூலம் தகவல் சேகரிக்க. இணைய இணைப்புடன் கூடிய 5 கணினிகளும் உள்ளன. குடிநீர், கழிப்பறை வசதியும் உண்டு. வாசகர்கள் குறைவு
தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இங்கு வாசகர்கள் நுாலகத்தை நல்ல வெளிச்சம், காற்றோட்டத்துடன், அமைதியான சூழலில் பயன்படுத்தலாம்.வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இத்தனை வசதி இருந்தாலும், தற்போது தினசரி 20 பேரே வந்து செல்கின்றனர். பலருக்கும் இந்த நுாலகம் குறித்து சரியான புரிதல் இல்லை. கட்டணமின்றி இலவசமாக, எத்தனை மணி நேரமும் பயன்படுத்தலாம். புத்தகங்களை எடுத்து கொடுக்க இங்கு பணியாளர் உதவுகிறார்.கல்லுாரி,பள்ளி மாணவர்கள் தங்கள் நிறுவன நுாலகங்களில் இல்லாத புதிய பொது அறிவு, போட்டித் தேர்விற்கான புத்தகங்களை இங்கு படிக்க முடியும். தற்போதைய பள்ளி,கல்லுாரி மாணவர்களிடையே இந்த மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். படித்து முடித்தவர்களும் இங்கு வரலாம் என்பதை தெரியப்படுத்த வேண்டும். பராமரிப்பில்லாத ஜெனரேட்டர்
வாசகர்கள் கூறும் போது: இங்குள்ள பாடப்புத்தகங்களை பாதுகாப்பாக வைக்க போதிய அலமாரிகள் இல்லை. மேலும் மின் தடை என்றால் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜெனரேட்டரும் இயங்கவில்லை. மாலை நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் மின் விளக்கின்றி படிக்க சிரமமாக உள்ளது. கணினி பயன்படுத்தும் போது அச்சிடவும், ஸ்கேனிங் வசதியும் இருந்தால் ஆன் லைன் விண்ணப்பம் செய்ய உதவியாக இருக்கும். மேலும் புத்தகங்களை கட்டணத்தில் நகலெடுக்க இயந்திர வசதி இருந்தால் கூடுதல் உபயோகமாக இருக்கும்.அரசால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இங்குள்ள கூட்ட அரங்கில் தற்போது போதிய இருக்கை வசதி இல்லை. போதுமான இருக்கைகள் வழங்கி மாணவர்களுக்கு தேர்வுக்கு வழிகாட்டி, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டியது அவசியாகும் என்றனர்.பேரூரரட்சி பராமரிப்பில் குடிநீர், கழிப்பறை தோட்டம், சுகாதார பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழ். ஆங்கில நாளிதழ்களும் விநியோகித்து உதவுகின்றனர். இதனை மாணவர்கள் மட்டுமின்றி முன்னேற துடிப்போர் பலரும் பயன்படுத்த முன் வர வேண்டும்.