பஸ் ஸ்டாப்களில் கொசுக்கடி பயணிகள் தவிப்பு
திருப்புவனம்: திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் குப்பை, கழிவு சேர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் காய்கறி, பழங்கள், பலசரக்கு பொருட்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்திற்கும் திருப்புவனம் வந்து செல்கின்றனர். இதுதவிர பரமக்குடி, மதுரை, ராமேஸ்வரம் செல்ல திருப்புவனம் வந்து தான் சென்று வர வேண்டும்.திருப்புவனத்தில் மானாமதுரை பஸ் நிறுத்தத்தில் மட்டும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது, நரிக்குடி விலக்கு, சிவகங்கை ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டில் நின்று பஸ் ஏறி இறங்குகின்றனர். ஆங்காங்கே கழிவு, குப்பை தேங்கி கிடப்பதுடன் கழிவு நீரும் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.மேலும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பஸ் ஸ்டாப்களில் நிற்கவே முடியவில்லை. கொசுக்கடியால் பலரும் பரிதவித்து வருகின்றனர். பஸ் நிறுத்தங்களில் குப்பையை அகற்றி சுகாதாரத்தை பேண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.