உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் வசதியின்றி பயணிகள் அதிருப்தி: வணிக வளாகமாக மாறியதால் ரூ.பல லட்சம் வீணானது

திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் வசதியின்றி பயணிகள் அதிருப்தி: வணிக வளாகமாக மாறியதால் ரூ.பல லட்சம் வீணானது

திருப்புத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு போதிய வசதி இல்லை என்று கூறி 2020ல் ரூ 3 கோடியில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு பல போராட்டத்திற்கு பின் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனாலும் இந்த ஸ்டாண்டில் பயணிகளுக்கான அடிப்படை வசதி போதுமானதாக இல்லை என்று பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். பயணிகள் காத்திருக்க நிழற்கூடம் இல்லை. பெயரளவில் ஒரு சில இருக்கைகள் மட்டும் உள்ளது.டிராக்கில் நிற்காத பஸ்கள்: டவுன் பஸ்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட டிராக்குகளில் தொலை துார பஸ்களும் நிற்கின்றன.பஸ்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிற்காமல் நுழைவு வாயிலுக்கு அருகாமையில் நிற்பதால் பயணிகள் குழப்பமடைகின்றனர். இதனால் பஸ் நிற்கும் இடத்திற்கு பயணிகள் சென்று வெயிலில் காத்திருந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.இதனால் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். கடைகள் வாடகைக்கு விடப்பட்டு பல மாதங்களாகியும் பல கடைகள் திறக்கப்படவில்லை. திறக்கப்படாத கடைகள் முன்பு பொருட்களை வைத்து வியாபாரம் நடப்பதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது.மேலும் கடை நடத்துபவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு விட்டு நடை பாதை முழுவதும் ஆக்கிரமித்துஉள்ளதால் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் நடுப்பகுதியில் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. புதுப்பிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த போது கழிப்பறைக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. தற்போது கட்டணக் கழிப்பறையாக மாறிய நிலையில் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதோடு, கட்டணமும் நேரத்திற்கு தகுந்தாற் போல் வசூலிக்கப்படுகிறது. போதிய பராமரின்றி காணப்படுவதால் பயணிகள் பயன்படுத்த முடியாமல் பணத்தை கொடுத்த நிலையில் மூக்கை பிடித்தபடி வெளியேறி விடுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகம் குப்பை நிரம்பி காணப்படுவதோடு துப்புரவுப் பணியும் உரிய நேரத்தில் நடப்பதில்லை.பஸ் கால அட்டவணை கழிப்பறை அருகில் பயணிகளுக்கு பயன்படாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பஸ்கள் நிற்கும் மூன்று டிராக்குகளிலும் ரூ 55 லட்சம் செலவில் கூரை அமைக்க திட்டமிடப்பட்டு இந்த திட்டம் கிடப்பில் உள்ளது. மக்களுக்கு பயன்படாத நிலையில் பல கோடி செலவழிக்கப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டிற்கு மேலும் நிதி ஒதுக்கி ஏன் விரயம் செய்ய வேண்டுமென்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் தொகுதியான பஸ் ஸ்டாண்ட் அவல நிலையை ஒரு முறையாவது பார்த்து மக்கள் பிரச்னையை தீர்க்க முயல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Karuthu kirukkan
பிப் 04, 2025 07:45

அமைச்சர் பெரியகருப்பன் அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பணத்தை தயார் செய்து கொண்டு இருப்பதால் தொகுதியை கவனிக்க நேரமில்லை ..மக்களின் வாக்குகளை வாங்கிக்கொள்ளலாம். அடுத்த தலைமுறை பிச்சை எடுக்கலாம் .


சமீபத்திய செய்தி