பென்ஷனர்கள் தபால்காரரிடம் உயிர் வாழ்சான்று பெறலாம் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
சிவகங்கை: ராணுவம், மத்திய, மாநில அரசு, இ.பி.எப்., பென்ஷனர்களுக்கு தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று வீடு தேடி வரும் என சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: வீட்டில் இருந்த படியே தபால்காரர்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி பென்ஷனர்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ்சான்று வழங்கப்பட உள்ளது. இதற்கு சேவை கட்டணம் ரூ.70யை தபால்காரரிடம் செலுத்த வேண்டும். பென்ஷனர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், அலைபேசி எண், பி.பி.ஓ., எண் மற்றும் பென்ஷன் கணக்கு புத்தக எண் விபரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று வழங்கப்படும். கடந்த ஆண்டு இந்த முறையில் அதிகளவில் பென்ஷனர்கள் உயிர் வாழ் சான்றினை பெற்றுள்ளனர். மேலும் தபால் துறை மூலம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி சேவைகளை நாடு முழுவதும் 1.36 லட்சம் தபால் நிலையங்களுக்கு விரிவுபடுத்தி, 10 கோடி பேருக்கு சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உயிர் வாழ் சான்று பெற நவ., 1 முதல் சிறப்பு முகாம்கள் தபால் நிலையங்களில் நடைபெறும் என்றார்.