ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு செல்லப்பட்ட குழாய்
திருப்புவனம்: திருப்புவனத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயந்திரத்தில் ராட்சத குழாய்களை கொண்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாதது. பள்ளம் தோண்டிய பின் பணிகளை நிறைவு செய்யாமல் அப்படியே விட்டு விடுவது போன்ற செயல்களில் ஒப்பந்தகாரர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குழாய்கள், ஜெனரேட்டர்கள், இரும்பு பொருட்களை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லாமல் மண் அள்ளும் இயந்திரம் மூலமாக ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்படுகிறது.திருப்புவனத்தில் நேற்று மதியம் இயந்திரத்தின் முன் பகுதியில் ஜெனரேட்டரையும், பின் பகுதியில் ராட்சத பிளாஸ்டிக் குழாய்களை வாகனத்தை விட அகலமான முறையில் வெறும் கயிறு கொண்டு கட்டியும் சென்றனர்.இதனால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.திருப்புவனம் கோட்டை பஸ் ஸ்டாப் அருகே குழாய் கொண்டு சென்ற போது இருபுறமும் இருந்த வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல் துறையினர் ஆபத்தான முறையில் பொருட்களை கொண்டு சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.