பூட்டிய ரேஷன் கடை முன் பொது மக்கள் தர்ணா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பூட்டிக்கிடந்த ரேஷன் கடை முன்பாக பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.இவ்வொன்றியத்தில் எஸ்.செவல்பட்டி ஊராட்சிக்கான ரேஷன்கடையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். கடை விற்பனையாளர் மதியம் 12:00 மணிக்கு வந்துவிட்டு 12:30 க்கு மீண்டும் பூட்டிவிட்டு சென்றுள்ளார்.காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் தொடர்ந்து இரண்டு மணி நேரமாக கடை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். மதியம் 2:00 மணிக்கு மீண்டும் கடையை திறந்த விற்பனையாளர் அங்கிருந்த பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். கடந்த மாதம் தான் இந்தக் கடையின் புதிய கட்டடத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து முழுமையாக செயல்பட உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடை தினமும் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை. அடிக்கடி பூட்டிவிட்டு வெளியில் சென்று விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக் கிடந்து ஏமாற வேண்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர். அரசு அனுமதித்த நேரங்களில் முறையாக கடையை திறந்து வைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் மதிய உணவுக்காகவே கடையை பூட்டி சென்றதாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.