நிறுத்தப்பட்ட புதுவயல் பஸ் மாணவர்கள் அவதி
காரைக்குடி : காரைக்குடி பள்ளத்துார் புதுவயல் செல்லும் டவுன் பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். காரைக்குடியில் இருந்து தினமும் பள்ளத்துார் புதுவயலுக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. புதுவயலில் இருந்து பள்ளத்துாருக்கு காலை 8:30 மணிக்கு செல்லும் டவுன் பஸ் அங்கிருந்து காரைக்குடிக்கு செல்கிறது. மீண்டும் மாலையில் காரைக்குடியில் இருந்து புறப்படும் டவுன் பஸ் பள்ளத்துாருக்கு மாலை 4:30 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து மீண்டும் கோட்டையூர் வழியாக புதுவயல் செல்கிறது. இந்த பஸ்சை பள்ளத்தூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன்படுத்தி வந்தனர். இந்த டவுன் பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.