திருப்புத்துாரில் மே 3ல் புரவி எடுப்பு: பிடிமண் வழங்கல்
திருப்புத்துார்: திருப்புத்துார் குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயிலில் மே 3ல் நடைபெறும் புரவி எடுப்பை முன்னிட்டு நேற்று பிடிமண் கொடுக்கப்பட்டது.இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழாவை திருப்புத்துார், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தினர் கொண்டாடுகின்றனர்.இந்த ஆண்டு மே 3ல் புரவி எடுப்பு விழா நடைபெற உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு மூன்று கிராமத்தினரும் செட்டியதெரு ராமர் மடத்திலிருந்து புறப்பட்டு கோயில் வந்தனர்.அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து வேளார்கள் மடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மடத்தில் கிராமத்தினர் புரவிகள் அமைக்க வேளாருக்கு பிடிமண் வழங்கினர். மே 2ல் கிராமத்தினர் தம்பிபட்டியில் சாமி அழைத்தலும், புரவி எடுக்க புதுப்பட்டி செல்லுதலும் நடைபெறும். மே 3ல் புரவி எடுப்பும், மே 4ல் மஞ்சுவிரட்டும் நடைபெறும்.