வெள்ளத்தில் மறைந்த பாலத்திற்கு விமோசனம்; நீண்ட துாரம் சுற்றிச்செல்லும் கிராமத்து மக்கள்
தேவகோட்டையை ஒட்டி செல்லும் மணிமுத்தாறு திருப்புத்துார் எல்லையிலிருந்து வருகிறது. தேவகோட்டை தாலுகாவில் பல கி.மீ., துாரம் செல்லும் ஆற்றில் எழுவங்கோட்டை, தேவகோட்டை, அனுமந்தக்குடி, நீர்க்குன்றம் பகுதியில் குறுக்கே மேம்பாலம், ஈகரை அருகே தரைப்பாலம் உள்ளது. கன மழை பெய்தாலோ, திருப்புத்துார், ஏரியூர் பகுதிகளில் வெள்ளம் வந்தால் மணிமுத்தாறில் அதிக அளவு தண்ணீர் ஓடும். சில நேரங்களில் மேம்பாலத்தை தொட்டும் வெள்ளம் செல்லும். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஈகரை கிராமத்திற்கும் பிரண்டவயல் கிராமத்திற்கும் இடையே ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இரு கிராமமும் துண்டிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர் மண்ணை கொட்டி தற்காலிக பாலம் அமைத்தனர். அதுவும் சில மாதங்கள் தான். அடுத்த மழை வெள்ளத்தில் அந்த மண்ணும் காணாமல் போய் விட்டது. பல ஆண்டுகளாகியும் இன்று வரை புதுப்பாலம் கட்டுவதற்கு அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலம் இருந்த இடத்தின் தடம் மறைந்து ஒத்தையடி பாதையாகி விட்டது. ஆற்றின் ஒரு புறம் பிரண்டவயல் கிராமத்தில் ஆற்றின் கரை வரை தார் ரோடும், எதிர்புறம் ஈகரையிலிருந்து ஆறு வரை பேவர் பிளாக் கற்களால் அமைக்கப்பட்ட ரோடும் உள்ளது. ஆனால் ஆற்றின் மையப்பகுதி பாலம் மறைந்து விட்டது. ஈகரை பகுதி மக்கள் தேவகோட்டைக்கு வர 5 கி.மீ., சுற்றி வர வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த ஆற்றின் கரையில் ஆற்றங்கரை நாச்சியப்பன் கோயில் உள்ளது. ஒற்றையடி பாதையாகி விட்டதால் போக்குவரத்து குறைந்து இரு புறமும் முட்செடிகள் வளர்ந்து பாதை மாயமாகி வருகிறது. தற்போது மழை காலம் வருகிறது. பொதுப்பணித்துறையினர் பிரண்டவயல் ஈகரை இடையே உள்ள மணிமுத்தாறு பகுதியை பார்வையிட்டு தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு கிராம மக்களும் எதிர்பார்க்கின்றனர்.