காரைக்குடியில் காவிரி குடிநீர் திட்டத்திற்கு ரோடுகள் சேதம்
காரைக்குடி: காரைக்குடியில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ரோடுகளை சேதப்படுத்துவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். காரைக்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தில் தடையில்லா குடிநீர் வினியோகம் செய்யும் பணியை துவக்கியுள்ளனர். இத்திட்டம் 2025-- 2026ம் ஆண்டு வரை செயல்படுத்தஉள்ளனர். தற்போது காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 7 வார்டுகளில் ரூ.23 கோடியில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாதாள சாக்கடை பணி முடிந்து, ரோடுகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது காவிரி கூட்டு குடிநீர் இணைப்பிற்காக ரோட்டை சேதப்படுத்தி வருகின்றனர். இந்த வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து ரோடு, தெருக்களிலும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.