பள்ளி மாணவர்கள் களப்பயண திட்டம் துவக்கம்
சிவகங்கை : முத்துப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் களப்பயண திட்டத்தை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் துவக்கி வைத்தார். அரசு பள்ளிகளை சேர்ந்த 1,953 மாணவர்களை, உயர்கல்விக்கான கல்லுாரி குறித்து அறிந்து கொள்ள செய்வதன் நோக்கமாக களப்பயண திட்டத்தை கலெக்டர் பொற்கொடி அறிமுகம் செய்தார். பிளஸ் 2 மாணவர்கள் கல்லுாரி களப்பயணம் சென்றனர். சாக்கோட்டை, கண்ணங்குடி, தேவகோட்டை, கல்லல் ஒன்றியத்தை சேர்ந்த 300 மாணவர்கள் களப்பயணத்தில் பங்கேற்றனர். இம்மாணவர்கள் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல், அரசு சட்டக்கல்லுாரி, செட்டிநாடு வேளாண்மை, ஆராய்ச்சி கல்லுாரி, அழகப்பா அரசு கல்லுாரி, அரசு பாலிடெக்னிக்களுக்கு சென்று பார்வையிட்டனர். அந்தந்த கல்லுாரிகளில் வழங்கப்படும் உயர்கல்வி பாடதிட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) வடிவேல், உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம், சிங்காரவேலன், உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன், உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், கண்ணன், மேற்பார்வையாளர் செல்வக்குமார் பங்கேற்றனர்.