உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு

திருப்புவனத்தில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக சம்பா பருவ சாகுபடிக்காக விவசாயிகள் நேரடி விதைப்பிற்கு மாறியுள்ளனர். திருப்புவனம் வட்டாரத்தில் நான்காயிரம் எக்டேரில் சம்பா மற்றும் கோடை பருவத்தில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் 120 நாள் பயிரான என்.எல்.ஆர்., கோ 51, அண்ணா ஆர் 4, அட்சயா உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தாண்டு 60 டன் வரை விதை நெல் திருப்புவனம் வட்டாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றுப்பாசனம் என்பதால் கூடுதல் விளைச்சலுக்காகவும், அறுவடையை எளிதாக்கவும் நாற்றங்கால் அமைத்து ஒரு மாதத்திற்கு பின் நாற்று பறித்து வயலில் நடவு செய்வது வழக்கம். நாற்றங்கால் அமைத்து அதனை பறித்து நடவு செய்ய ஏக்கருக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும், ஓரு ஏக்கர் நடவு செய்ய பத்து ஆட்கள் மூலம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும், சமீப காலமாக விவசாய கூலி வேலைக்கு வர மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். 1999ல் 9 ஆயிரத்து 587 ஆண், 5 ஆயிரத்து 898 பெண் தொழிலாளர்கள் உட்பட 15 ஆயிரத்து 485 விவசாய கூலி தொழிலாளர்கள் இருந்தனர். 2011ல் கூலி தொழிலாளர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 222 பேராக உயர்ந்த நிலையில் ஓரளவிற்கு தட்டுப்பாடு இன்றி கூலி ஆட்கள் கிடைத்து வந்தனர். 2025ல் கூலி ஆட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. சம்பா பருவத்திற்கு போதிய மழை இல்லாத நிலையில் பம்ப்செட் விவசாயிகள் வேறு வழியின்றி கிணற்று தண்ணீரை வைத்து நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், டி. வேளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் கிடைக்காததால் நேரடி விதைப்பிற்கு மாறி விட்டனர். விவசாயிகள் கூறுகையில்: நேரடி விதைப்பு பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் தான் மேற்கொள்ளப்படும், ஆற்றுப்பாசனத்தை நம்பி விவசாயம் செய்யும் திருப்புவனம் வட்டாரத்தில் செய்வது கிடையாது. இந்தாண்டு கூலி ஆட்கள் கிடைக்கவே இல்லை. இதனால் நேரடி விதைப்பிற்கு மாற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. நேரடி விதைப்பு காரணமாக களை அதிகம் உருவாகும், ஏக்கருக்கு 35 மூடைகள் வரை கிடைத்த இடத்தில் 20 முதல் 25 மூடைகள் வரையே கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயத்தை காப்பாற்ற தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய காலங்களில் 100 நாள் திட்ட பணிகளை நிறுத்த வேண்டும் அல்லது 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாய சாகுபடி பரப்பளவு குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி