உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் குடிநீர் தட்டுப்பாடு தொட்டி இல்லாததால் சப்ளையில் பாதிப்பு

இளையான்குடியில் குடிநீர் தட்டுப்பாடு தொட்டி இல்லாததால் சப்ளையில் பாதிப்பு

இளையான்குடி : இளையான்குடியில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டும் திட்டம் கிடப்பில் உள்ளதால் காவிரி கூட்டுக்குடி நீர் முறையாக கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இளையான்குடி தாலுகாவின் தலைமையிடமாக உள்ளது.இங்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. பேரூராட்சி சார்பில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சில போர்வெல்லில் தண்ணீர் இல்லாமல் நின்று போனது. இதனால் இளையான்குடியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தனியார் சிலர் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2009ம் ஆண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் இளையான்குடி வழியாக ராமநாதபுரத்திற்கு செல்லும் திட்டம் துவக்கப்பட்டது. இளையான்குடி மக்களுக்கு காவிரி நீர் விநியோகம் செய்வதற்காக சமுத்திரம் ஊரணி அருகில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுவதற்காக பூஜை போடப்பட்டு இதுவரை பணிகள் எதுவும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தொட்டி கட்டாததால் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பொது பைப் மற்றும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீடுகளுக்கும் காவிரி நீர் முறையாக வருவதில்லை. மேலும் சிலர் வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால் தெருவில் உள்ள அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வில்லை.காவிரி நீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதால் மக்கள் தனியார் லாரிகளில் விற்கும் குடிநீரை குடம் ஓன்றுக்கு மூன்று முதல் ஆறு ரூபாய் வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.கிடப்பில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டும் திட்டத்தை துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்