உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி காலிக்குடங்களுடன் குவிந்த பெண்கள்

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி காலிக்குடங்களுடன் குவிந்த பெண்கள்

சிவகங்கை : இளையான்குடி ஒன்றியம் நகரகுடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.நகரகுடி கிராம ஊராட்சியில், 55 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கென ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒரே ஒரு தெருகுழாய் மட்டுமே பொருத்தியுள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீர் இங்கு கிடைக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த குழாயிலும் சரிவர தண்ணீர் வரவில்லை. இதனால், காலையில் பள்ளிக்கு புறப்படும் மாணவர்கள் குடிக்க கூட தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. அங்குள்ள ஒரு அடிபம்பும் பழுதடைந்து பல நாட்களாக செப்பனிடாமல் உள்ளது. இது குறித்து பி.டி.ஓ.,விடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று, காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.இது குறித்து கிராமத்தை சேர்ந்த முனியாண்டி கூறுகையில்,'' நாங்கள் குடியிருக்கும் தெருக்களில் கூடுதல் குடிநீர் குழாய் பொருத்த வேண்டும். மூன்று இடங்களில் 'சின்டெக்ஸ்' டேங்க் பொருத்தினால் தான், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். பி.டி.ஓ.,விடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை. ஆகையால், கலெக்டரிடம் முறையிட வந்தோம்,'' என்றார்.கிராமத்தை சேர்ந்த லட்சுமி கூறுகையில்,'' எங்கள் பகுதி மக்களுக்கென உள்ள ஒரு குழாயில் காவிரி கூட்டு குடிநீர் ஒரு மணி நேரம் கூட வருவதில்லை. இதனால், குடிநீருக்காக நகரக்குடி கண்மாய்க்குள் உள்ள கிணற்றில் குடிநீர் எடுக்கிறோம். அந்த கிணறும் தூர்ந்துவிட்டதால், சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை