சிவகங்கை: சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில் வாழைத்தார், இலை மொத்த விற்பனை மையம் உள்ளது. இங்கு சிவகங்கை தாலுகாவிற்கு உட்பட்ட மலம்பட்டி, கண்டாங்கிபட்டி, சாலுார், இடைய மேலுார் உள்ளிட்ட பகுதியிலும், மேலுார் தாலுகாவில் விளையும் வாழை தார், வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வாழை ஏலம் விடப்படும். இங்கு பூவன், ஒட்டு, ரஸ்தாளி, பச்சை, சக்கை, செவ்வாழை ரக தார்கள் வாரத்திற்கு 20 ஆயிரம் , ஆயிரம் இலை கட்டுகள் (ஒரு கட்டு 200 இலைகள்) வரை விற்பனைக்கு வருகின்றன. தற்போது சபரி மலை சீசன். தை மாத தைப்பூச திருவிழாவிற்காக வாழை தார், வாழை இலைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. ஒரு வாழை தாரின் விலை கமிஷன் கடையில் பழத்தை பொறுத்து ரூ.550 முதல் ரூ.1,200 வரை விற்கின்றன. ஆனால், விவசாயிகள் தோட்டத்திற்கே நேரடியாக செல்லும் சிறு வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாழை தார், இலைகளை வாங்கி செல்கின்றனர். கமிஷன் கடையில் ஏலம் மூலம் கூடுதல் விலை கிடைக்க வேண்டிய விவசாயிகள், சொற்ப விலைக்கே விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். கமிஷன் கடைக் காரர்கள் கூறியதாவது: தற்போது சீசன் என் பதால் வாழை தார், இலைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. கமிஷன் கடையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தால், ஏல தொகை அதிகரிக்கும் போது, அந்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும். ஆனால், தற்போது சிறு வியாபாரிகள் நேரடியாக விவசாயிகள் நிலத்திற்கே சென்று சொற்ப விலைக்கு வாங்கி விடுவதால், நல்ல லாபத்தை விவசாயிகள் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.