கீழடி தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்பெயின் பயணம்; நவீன தொல்லியல் ஆய்வு குறித்த பயிற்சிக்காக
கீழடி: நவீன தொல்லியல் ஆய்வு குறித்த பயிற்சிக்காக ஸ்பெயின் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பாக தமிழகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி தொல்லியல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ள இரு ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்றனர்.கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 2015 முதல் அகழாய்வு துவங்கி நடக்கிறது. தற்போது மாநில அரசின் சார்பில் பத்தாம் கட்ட அகழாய்வு நடக்கிறது. சிந்து சமவெளி நாகரீகத்தைச் சேர்ந்தது கீழடி என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கீழடியில் பண்டைய தமிழர்களின் எழுத்தறிவு, வேளாண்மை, தொழில்துறை, கட்டடக்கலை, கால்நடை வளர்ப்பு, தண்ணீர் சேமிப்பு உள்ளிட்டவைகள் உலகம் முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் உலகம் முழுவதிலும் இருந்தும் தொல்லியல் ஆய்வாளர்கள் கீழடி வந்து செல்கின்றனர்.மத்திய அரசின் தொல்லியல் துறை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், ஸ்பெயினில் நடக்கும் அகழாய்வு பணி பயிற்சிக்காக ஆய்வாளர்களை அனுப்புவது வழக்கம். முதன்முறையாக கீழடி அகழாய்வில் ஈடுபட்டுள்ள கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஆகியோரை ஸ்பெயினில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கும்.இயக்குனர் ரமேஷ் மத்திய அரசின் அகழய்வு பணியின் போது பயிற்சி மாணவராக சேர்ந்து பயிற்சிக்கு பின் தமிழக தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்தவர். கீழடி அகழாய்வில் 10 ஆண்டு அனுபவம் மிக்கவர். கீழடியில் நவீன முறையில் அகழாய்வு செய்ய வசதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இணை இயக்குனர் அஜய் கீழடி அகழாய்வில் 5 வருட அனுபவம் மிக்கவர் என்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இருவரும் 15 நாட்கள் ஸ்பெயினில் பயிற்சி மேற்கொள்வர். தமிழக தொல்லியல் துறையில் 28 தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ள நிலையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பட்டுள்ளனர். இதன் மூலம் கீழடி அகழாய்வு முக்கியத்துவம் பெற்றதாக மத்திய தொல்லியல் துறை கருதுகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.