| ADDED : நவ 20, 2025 02:53 AM
சிவகங்கை: தமிழக நில அளவை துறையில் 1,300க்கும் மேற்பட்ட சர்வேயர், ஆய்வாளர் காலிப்பணியிடங்களால் பட்டா வழங்குதல், நில அளவீடு பணிகளில் தொய்வு நீடிப்பதாக தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் நில அளவை துறையின் கீழ் 2 ஆயிரம் சர்வேயர்களால் 5 கோடிக்கும் மேலான பட்டதாரர்களின் நிலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் குறைதீர் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம், உங்களை தேடி உங்கள் ஊரில், உங்களுடன் ஸ்டாலின் போன்ற சிறப்பு திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா பணிகள், புதிய திட்டங்களுக்கான நில எடுப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்று பல திட்டங்களுக்கான நிலங்களை சர்வே செய்யும் பணியிலும் இந்த சர்வேயர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தையும் மாநில அளவில் சர்வேயர் முதல் சார் ஆய்வாளர் வரையுள்ள 3,999 பேர்களில் காலியாக உள்ள பணியிடங்கள் போக எஞ்சியிருக்கும் 2,624 பேர் மட்டுமே செய்து வருகின்றனர். பணிச்சுமைக்கு இடையே கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட சர்வேயர் பதவிகளில் இன்னும் 502 பணியிடங்கள் ஆறரை ஆண்டாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. ஒப்பந்த பணியாளர்களை அரசு நியமிப்பதால், சார் ஆய்வாளர் பதவி உயர்வு பாதிக்கப்படுவதோடு, துணை ஆய்வாளர் பதவி உயர்வில் கடைபிடிக்கும் நடைமுறையிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மாநில அளவில் துணை ஆய்வாளர், ஆய்வாளர் களுக்கான சம்பள முரண்பாட்டை களைந்திட அரசு முன்வரவேண்டும் என தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. காலவரையற்ற ஸ்டிரைக் தொடரும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில தலைவர் ராஜா கூறியதாவது: நில அளவை துறையில் உள்ள பிரச்னைகளை தீர்த்து, காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக நியமிக்க வேண்டும் உட்பட 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளோம். அரசு, எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றித்தராத பட்சத்தில் இப்போராட்டம் தொடரும் என்றார்.