தாயமங்கலம் கோயில் பங்குனி பொங்கல் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.இன்று இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர்பவனி நடைபெற உள்ளது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.நேற்று பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே தெப்பக்குளத்தில் நீராடிய பிறகு தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பாலை தொட்டில், அங்கப்பிரதட்சணம், முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்டனர்.பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 6ம் தேதி இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர் பவனியும், 7ம் தேதி பால்குடம்,ஊஞ்சல் உற்ஸவம், பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.