| ADDED : டிச 27, 2025 05:41 AM
கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே சொட்டதட்டி கிராமத்தில் ஓட்டு வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியினருக்கு ரூ.5967 மின் கட்டணம் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி 75, முனியம்மாள் 70, தம்பதி. கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். வயது முதிர்வு காரணமாக கூலி வேலைக்கு கூட செல்ல முடியாமல் அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையை வைத்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு பேர் மட்டுமே இருப்பதால் வீட்டில் மூன்று எல்.இ.டி., விளக்கு, ஒரே ஒரு மின் விசிறி பயன்படுத்துகின்றனர். இரு மாதங்களுக்கு ஒரு முறை ஏழு ரூபாய், 45 ரூபாய், 65 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்தியுள்ளனர். நவம்பரில் மின்கட்டணம் கணக்கிடும் போது ஐந்தாயிரத்து 967 ரூபாய் என கணக்கிட்டு செலுத்த வலியுறுத்தியுள்ளனர். டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வளவு மின்கட்டணம் வர வாய்ப்பே இல்லை என கூறி பொட்டப்பாளையம் துணை மின் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆய்வு செய்த ஊழியர்கள் மீட்டர் பழுது இல்லை, மின் சாரம் செலவு செய்ததற்கான கட்டணம் தான் இது, எனவே ஐந்தாயிரத்து 967 ரூபாய் மின் கட்டணத்தை செலுத்த வலி யுறுத்தி சென்றுள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மீட்டரில் பழுது ஏதும் கிடையாது, டிஜிட்டல் மீட்டரில் கணக்கிடும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம், பிரச்னை குறித்து உயர் அதிகாரி களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.