தாராளம்மாவட்டத்தில் பாலிதீன் உபயோகம்மஞ்சப்பை திட்டம் மறைந்து போச்சு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பாலிதீன் பயன்பாடு தாளாளமாக உள்ளது.மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசின் மஞ்சப்பை திட்டம் பயன்பாடில்லாமல் உள்ளது.பாலிதீன் பொருட்கள் எளிதில் மக்குவதில்லை. இதனால் நிலத்தடி நீராதாரம் பாதித்து சுற்றுச்சூழல் பாதிக்கிறது.இந்த பாலிதீன்,பிளாஸ்டிக் ரகப் பொருட்களை கடைகளில் டீ உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து கொடுக்கவும், பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது.2019 ஜன.1 முதல் இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இதனை முழுமையாக செயல்படுத்த அரசு அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டுகின்றனர். சிவகங்கை, மானாமதுரை நகராட்சி, காரைக்குடி மாநகராட்சி, திருப்புத்துார் உள்ளிட்ட 11 பேரூராட்சி,12 ஊராட்சி ஒன்றியங்கள் 445 ஊராட்சிகளில் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை போதுமான அளவில் இல்லை. ஹோட்டல், டீக்கடைகள், மளிகை, பெட்டிக்கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பொருட்களின் உபயோகம் தாராளமாகிவிட்டது.சிவகங்கை நகர் மட்டுமின்றி குக்கிராம பெட்டிக்கடைகளில் தின்பண்டம் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.மக்களிடம் பாலிதீன் உபயோகம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு செயல்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது.குறிப்பாக மருத்துவக் கல்லுாரியில் உள்ள கடைகளில் உணவு பொருட்கள் பிளாஸ்டிக் கவரில் வைத்தே கொடுக்கப்படுகிறது. மருத்துவக் கல்லுாரி வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் கவர்கள் நிரம்பி காணப்படுகிறது.அரசு பாலிதீனுக்கு மாற்றாக மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது குறித்து விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்ட வில்லை. மஞ்சப்பை திட்டம் முடங்கி கிடக்கிறது. பாலிதீன் தவிர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுடன் மஞ்சப்பை பயன்பாட்டை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகளும் கடைகளில் பெயரில் சோதனை செய்து சிறிய அளவில் அபராதம் விதிப்பதால் இந்த நிலை தொடர்கிறது. மாறாக பிடிபடும் விற்பனையாளர்கள் இந்த பொருட்களை மாவட்ட அளவில் மொத்தமாக விற்பது யார் என அவர்களிடமே விசாரித்து சோதனை நடத்தி பறிமுதல் செய்ய வேண்டும்.