மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வாய்ப்பில்லை
மானாமதுரை: மானாமதுரையில் கண்ணார் தெரு, கிருஷ்ணராஜபுரத்தை இணைக்கும்வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற வாய்ப்பில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மானாமதுரை கீழ்கரை கண்ணார் தெரு பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அருகிலிருந்து மேல்கரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டுமென்று 40 ஆண்டாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சட்டசபை, எம்.பி., தேர்தலின் போது வேட்பாளர்களும் இங்கு பாலம் கட்டப்படும் என வாக்குறுதி அளித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுக்கு முன் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்குப் பிறகு எந்த ஒரு பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க.,ஆட்சியிலும் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இங்கு பாலம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி நிதியும் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் இரு கரைகளை சேர்ந்த மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருவதால் 40 வருடங்களாக மிகுந்த சிரமப்பட்டு வருவதால் பாலம் கட்ட வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மானாமதுரை கண்ணார் தெரு செல்வம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார். பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் பணி மேற்கொள்ள திட்டத்தை சமர்பித்தோம். ஆனால், ஏற்கனவே 850 மீட்டருக்கு அருகிலேயே உயர்மட்ட பாலம் இருப்பதால், இங்கு பாலம் கட்டுவதற்கான சூழல் எழவில்லை. அரசும் இத்திட்டத்தை சாத்தியமில்லாதவை என அறிவித்துவிட்டதாக பதில் அளித்துள்ளனர். இதனால், மானாமதுரை மக்களின் பாலம் கனவு கானல் நீராகி விட்டதாக புலம்பி வருகின்றனர்.