உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அருங்காட்சியகம் வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்! காட்சி கூடங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்

கீழடி அருங்காட்சியகம் வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்! காட்சி கூடங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய 13,384 பொருட்கள் ஆறு கட்டடத் தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுடுமண், இரும்பு, பாசிகள், எடை கற்கள், நாணயங்கள், விளையாட்டு பொருட்கள் என தனித்தனி கட்டட தொகுதிகளில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் மெகா சைஸ் எல்.இ.டி., டிவி.,க்கள் வைக்கப்பட்டு அந்தந்த கட்டட தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்த அனிமேஷன் காட்சிகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு கட்டடத்திலும் பார்வையாளர்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெய்நிகர் காட்சிக்கூடத்தில் இரண்டு கேமராக்களில் ஒன்று ஒரு மாதத்திற்கும் மேலாக செயல்படவே இல்லை. தினசரி 2000 பார்வையாளர்கள் வந்து செல்லும் நிலையில் மெய்நிகர் காட்சி கூடத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே இருப்பதால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மெய்நிகர் காட்சி கூடத்தில் பார்வையாளர்கள் பழங்கால விளையாட்டுகளான தாயம், பகடை, பரமபதம் விளையாட மெகா சைஸ் டச் ஸ்கீரீன் வசதி கொண்ட அமைப்பு இரண்டு உள்ளது. அதில் ஒன்று மட்டும் தான் செயல்படுகிறது. மற்ற அமைப்பு திறப்பு விழா நாளில் இருந்தே காட்சிப்பொருளாக உள்ளது. அதே போல பாசி மணிகள் காட்சி கூடத்தில் ஆளுயர ஸ்கேனர் முன் நின்றால் அதில் காட்டப்படும் பாசி மாலைகள் அணிவது போன்று படம் எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மெயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு சில நாட்கள் மட்டுமே இயங்கிய நிலையில் அதுவும் செயல்படவில்லை. 2023 மார்ச்சில் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் அதே பொருட்கள் தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பின் கூடுதல் பொருட்கள் ஏதும் இதுவரை காட்சிப்படுத்தப்படவில்லை. இதனால் பார்வையாளர்கள் வருகை குறையும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ