சிங்கம்புணரியில் பாரம்பரிய எருதுகட்டு விழா
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் பாரம்பரிய முறைப்படி நடந்த எருதுகட்டு விழாவில் காளையின் காலில் இருந்து மூன்று சலங்கைகள் விழுந்ததால், இந்தாண்டு மூன்று போகம் விவசாயம் இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இங்குள்ள வீரையா கோயிலில் புரட்டாசி வழிபாட்டை முன்னிட்டு எருதுகட்டு விழா நடத்தப்பட்டது.விழாவுக்காக சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட காளைகளில் இருந்து முழு வெள்ளை நிற காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் முன்னங்கால்களில் 4 ஐம்பொன் சலங்கைகள் மாட்டப்பட்டு வீரையா கோயில் வளாக மரத்தில் கட்டி வைக்கப்பட்டது. அக். 7ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த வடம் வெட்டி அவிழ்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓடிய காளையை பலரும் விரட்டிச் சென்றனர். காளை ஓடிய போது அதன் கால்களில் இருந்து 3 சலங்கைகள் விழுந்தன. இதனால் இந்த ஆண்டு மூன்று போகம் விளைச்சல் கிடைக்கும் என்று இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.