| ADDED : ஜன 19, 2024 04:49 AM
மானாமதுரை: மானாமதுரையில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வழியில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து தினந்தோறும் திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மடப்புரம், சிவகங்கை, மறவமங்கலம், தாயமங்கலம், இளையான்குடி, முனைவென்றி, குறிச்சி, பிராமணக்குறிச்சி, பரமக்குடி, வீரசோழன், நரிக்குடி, சின்ன கண்ணனுார், கொட்டகாய்ச்சியேந்தல், தேளி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் ஓடும் அரசு டவுன் பஸ்கள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் ஓட்டை, உடைசலாக இருப்பதால் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வழியில் நின்று விடுகிறது.பயணிகள் கூறுகையில், மானாமதுரையில் அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வழியில் நிற்பதே வேலையாகி விட்டது. நாங்கள் வேறு வழியின்றி ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.அரசு டவுன் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறுகையில், பஸ்கள் மிகவும் பழைய பஸ்களாக இருப்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.இதனை சரி செய்யக்கோரி பணிமனையில் கூறினால் அங்கு அதனை பழுது பார்ப்பதற்கு போதிய பழுது நீக்குபவர்கள் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாததால் பஸ்களை பழுதுடன் இயக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அடிக்கடி நின்று வருகிறது.