காரைக்குடி கண்மாய்களில் கழுங்கு, மடைகள் சேதம்
காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்களில் மடைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். காரைக்குடி தாலுகாவில்காரைக்குடி கண்மாய், குன்றக்குடி, ஆற்காடு, சாலி, நாட்டார், பாதரக்குடி கண்மாய்கள் உட்பட 121 கண்மாய்கள் உள்ளன. தற்போது மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் நிரம்பி கண்மாய்களை சென்றடைகிறது. காரைக்குடியில் பெய்த கனமழையால் மழைநீர் கண்மாய்களில் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல கண்மாய்கள் இருந்தாலும் முறையாக பராமரிப்பின்றி கிடக்கிறது. முட்புதர்கள், ஆகாய தாமரைகள் சூழ்ந்து கிடக்கிறது. அதேபோல் கண்மாய்களின் ஆதாரமான வரத்து கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. கால்வாய்களில் கழிவுநீர் விடப்பட்டதால் கண்மாய் முழுவதும் கழிவுநீராக காட்சி அளிக்கின்றன. கண்மாய் மடைகள், கழுங்குகள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. சேதமான கண்மாய் கழுங்கு, மடைகளை சீரமைக்க வேண்டும்.